Vice President of the Republic of India

04/14/2026 | Press release | Distributed by Public on 04/14/2026 03:57

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

New Delhi
April 14, 2026

குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். சித்திரை ஒன்று தமிழர்களோடு உலக மக்கள் அனைவருக்கும் புதிய தொடக்கமாக சிறக்கட்டும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது சம்பிரதாயக் கொண்டாட்டம் அல்ல. நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கொண்டாடும் அற்புத நிகழ்வு. பாரம்பரியம், குடும்பம், ஆன்மிகம், வாழ்வியல் ஒழுங்கு என அனைத்தையும் இணைக்கும் பண்டிகை. புதிய நம்பிக்கையோடு பழைய அனுபவங்களைக் கொண்டு முன்னேறுவதற்கான தொடக்கம். தமிழர் கலாச்சாரத்தையும் அறிவியலையும் பிரதிபலிக்கும் இப்பண்டிகையை பெருமிதத்துடன் நாம் கொண்டாட வேண்டும்.

சித்திரை மாதம் என்பது விவசாயத்திற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கும் காலம். நிலம் பண்படுவதற்கான பணிகளை விவசாயிகள் ஆரம்பிப்பார்கள். உழைப்பே உயர்வைத் தரும் என்ற சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் உழைப்பைத் தொடங்குவதைக் கொண்டாடும் பண்பு நம் மக்களுக்கு இருந்தது. நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்டங்களைக் காண்கிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் பாரத தேசத்தில் நிலவும் பொதுமைக்கும் ஒற்றுமைக்கும் உதாரணமாக இருக்கின்றன.

இந்தியாவின் வடக்குப் பகுதியான பஞ்சாபில் மக்கள் பைஷாகி என்று அறுவடை திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். தெற்கில் கேரளத்தில் விஷு என்று கொண்டாடுகிறார்கள். அங்கு கனி காணல் முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மக்கள் பிஹு என்று கொண்டாடி மகிழ்கின்றனர். மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்று உற்சாகமாக இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் கங்கையில் நீராட இந்த நாளில் குவிகின்றனர். தெலுங்கு பேசும் மக்கள் யுகாதி என சமீபத்தில் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். குடிபடுவா என்று மராத்தி மற்றும் கொங்கணி மக்களும் அவர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற பெருமைக்கு நாம் உரித்தானவர்கள் என்பதை நமது முன்னோர்களின் அறிவியல் அறிவு நிரூபிக்கிறது. உலகம் அதன் இயக்கம் இவற்றில் முன்னோர்களின் துல்லியமான கணிப்பை நாம் இந்தப் புத்தாண்டில் காணலாம்.

பூமி, சூரியனை ஒருமுறை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகின்றன. இந்தகால அளவீட்டின் அடிப்படையில் நமது வருடப்பிறப்பு அமைகிறது. எனவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது.

உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டரை நாமும் பின்பற்றவேண்டிய அவசியம் இருக்கிறது என்றாலும் நமக்கென இருக்கும் தமிழ் நாள்காட்டியை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நாள், மாதம் இவற்றுக்கு மட்டுமல்ல வருடங்களுக்கும் பெயர் வைத்து வழங்கும் மரபு நமது தனிச் சிறப்பு. அறுபது ஆண்டுகளின் பெயர்கள் இருக்கின்றன. அதில் "பராபவ" என்ற பெயர் கொண்ட இந்த ஆண்டு நாற்பதாவது ஆண்டு ஆகும்.

"அஸ்ட்ரோனோமி" என்ற சொல் கிரேக்க மொழியில் "நட்சத்திரங்களின் விதிகளைப் படிக்கும் அறிவியல்" என்கிறார்கள். அதையே நம் மக்கள் வானியல் என்றனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூகோளம் என உலகம் கோள வடிவம் கொண்டது என்பதில் தொடங்கி அண்ட வெளி அதில் கோள்களின் இயக்கம் அவை நமது பூமியை எப்படி பாதிக்கின்றன என்பது வரை முன்னோர்கள் வானியலோடு காலம் பற்றிய புரிதலும் கொண்டிருந்தார்கள்.

உலகின் தோற்றத்தையும், உலகின் இயக்கத்தையும் பதிற்றுப்பத்து காட்டுகிறது.

"நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;"

ஐம்பூதங்களின் கூட்டுச் சேர்க்கையால் ஆனது இந்த உலகம், இது, நாள், கோள், திங்கள்,ஞாயிறு, கனை அழல் ஆகியவற்றின் இயக்கத்தால் பூமியின் இயக்கமும் அமைகிறது.

"வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து" என்ற சிறுபாணாற்றுப்படை வரிகள் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி அமைந்துள்ளன என்று விளக்குகின்றன.

சங்க இலக்கியங்களில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக சனி கிரகம் கருமையானது என்பதை புறநாநூற்றில் 'மைம்மீன்' என்று அதாவது கரிய நிறம் கொண்டது என்று கபிலர் பாடுகிறார்.

கோள்கள் பற்றிய நம் முன்னோர்களின் வியத்தகு அறிவாற்றல் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை கணிப்பது வரையில் ஆழமுடையதாக இருந்திருக்கிறது. அப்படி கணிப்பவர்களை கணியன் என்று அழைத்தார்கள். கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப்புலவரின் பெயர்க் காரணம் அதுவே. தொல்காப்பியரும் கணியர்களை அனைத்தையும் அறிந்து சொல்லும் திறம் உடையவர்கள் என்பதால் "அறிவர்" என்கிறார். திருமணம் முதலான நல்ல நிகழ்வுகளை நாள் நேரம் பார்த்தே பழந்தமிழர்கள் செய்து வந்தனர் என்பதை அகநாநூறு காட்டுகிறது.

இந்த மரபின் தொடர்ச்சியை நாம் இன்றைக்கும் பின்பற்றி வருகிறோம். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நான் இரு விதங்களில் இன்றைய இளம்பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். சித்திரை முதல் நாள் கோயில்கள் அனைத்திலும் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். அதனைக் கேட்க ஊர் மக்கள் கூடி இருப்பார்கள்.

ஐந்திறன் என்றும் சொல்வதுண்டு. அவை, வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என்பன. இந்த ஐந்து அங்கங்களைக் கொண்டு காலத்தை கோள்களின் சுழற்சியைத் தீர்மானித்து அந்த ஆண்டில் மழைப் பொழிவு எப்படி இருக்கும்? விளைச்சல் எப்படி இருக்கும் என்பன போன்ற தகவல்களைப் படித்துச் சொல்லுவார்கள்.

சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் சௌரமான முறை என்றும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திரமான முறை என்றும் இரு விதங்களில் காலக் கணக்கீட்டை நம் முன்னோர்கள் செய்து வந்துள்ளனர். இன்றைக்கும் கிரஹண காலங்களை இத்தனை நவீன கருவிகளைக் கொண்டு கணிக்கின்றனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இவற்றை மிகத் துல்லியமாகக் கணித்து வைத்துவிட்டனர்.

நமது மூதாதையர்களின் சொத்து நமக்கு உரிமையானது அல்லவா? அதனால் இந்த வானியல் அறிவை அதன் தொடர்பான காலக் கணிப்பைப் போற்றும் வகையில் புத்தாண்டில் கோயில்களுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசிப்பதை கேளுங்கள். வழிவழியாக நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொக்கிஷம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை.

மற்றொரு விதத்தில் நம் மக்களின் மதிநுட்பத்தைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் உணரலாம். பூஜை அறையில் கனிகள், மலர்கள் முதலாக இயற்கை வழங்கும் பொக்கிஷங்களை வைத்து அவற்றை முதலில் பார்க்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள்.

வசந்த காலம் தாவரங்கள், ஆலமரங்கள், அரச மரங்கள் முதல் சின்னஞ்சிறிய செடிகள் வரை புதிய பொலிவோடு தங்கள் பசுமையை மீட்டெடுத்துக் கொள்ளும் காலம். புதிய மலர்களும் கனிவகைகளும் விளைந்து மணம் பரப்பும் காலம். புதிய தொடக்கம் இயற்கையிலிருந்து தொடங்குகிறது. இயற்கையோடு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தமிழர்கள் தாங்களும் காலம் தங்களுக்கு புதிய தொடக்கத்தை அளிப்பதாக மகிழ்ந்து கனி காணலோடு ஆண்டைத் தொடங்குகிறார்கள்.

அதே போல உணவில் இனிப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு கார்ப்பு கசப்பு ஆகிய அறுசுவைகளையும் கொண்ட மாங்காய் பச்சடி உணவை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். கசப்பை ஏன் இந்த நாளில் கட்டாயமாக்க வேண்டும்?

வாழ்க்கை என்பது அனைத்து சுவைகளையும் கொண்டது. இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் சம மனநிலையில் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும் என்று நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வதாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாடுகளுடன் நமக்குத் தொடர்பு இருந்து வருவதாலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலும் சித்திரைத் திருநாள் பாரம்பரியமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டம் நமது பாரம்பரிய பெருமையை நினைவூட்டுகிற அதே வேளையில் நாடு முழுவதும் ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு விதத்தில் கொண்டாட்டம் நிகழ்கிறது என்பதே இந்த தேசம் கலாச்சார ரீதியில் என்றைக்கும் ஒரே தேசமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு சான்று. சகோதரர்களாக நாம் என்றும் கைகோர்த்து வாழ்வோம் என்பதற்கான நம்பிக்கை. மகிழ்ச்சியும் ஒற்றுமையும் தழைத்தோங்க புதிய ஆரம்பமாக மக்கள் இதனைப் பார்க்கின்றனர்.

இளைஞர்கள் நேர்மறை சிந்தனையோடும் இறை நம்பிக்கையோடும் முன்னோர் காட்டிய வழியில் தொய்வில்லாது புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். தேசத்தின் மேன்மைக்கு உழைக்க வேண்டும் என்ற உறுதியோடு உழைப்பைத் தொடங்க வேண்டும். பெரியோரின் ஆசிகளோடு இளையோர் முன்னேற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Is Press Release?:
0
Vice President of the Republic of India published this content on April 14, 2026, and is solely responsible for the information contained herein. Distributed via Public Technologies (PUBT), unedited and unaltered, on April 14, 2026 at 09:57 UTC. If you believe the information included in the content is inaccurate or outdated and requires editing or removal, please contact us at [email protected]